திருகோணமலை மாவட்டத்தின் முகம் மாறி வருகின்றது. 2006 ஆம் ஆண்டு சம்பூரில் தொடங்கிய போர், முள்ளிவாய்க்காலுடன் முடிவடைந்ததும், தமிழர் அடையாளத்தை அழித்து வருகின்றது.
விடுதலைப்புலிகளின் இராணுவப் பலம் சிதைக்கப்பட்டதன் பின்னர், தமிழர்களின் கலாசாரமும் சிதைக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப் போராட்டம் இலங்கை அரசினால் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர் பௌத்த அடையாளங்கள் தமிழர் நிலங்களில் முளைக்கத் தொடங்கியுள்ளன.
ஈழ வரலாற்றில் திருகோணமலை மண்ணுக்கு பல சிறப்புகள் உள்ளன. கோணேசர் ஆலயம், கன்னியா வெந்நீர் ஊற்று, வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம், சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், கங்குவேலி அகத்திய தாபனம் என்பன தமிழர்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த அம்சங்கள். இந்தச் சான்றுகள் திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் வரலாற்றை புராண இதிகாச காலங்களுக்கு இட்டுச் செல்கின்றது.
இதன் மூலம் தமிழர்களுக்கும், திருகோணமலைக்கும் உள்ள சிறப்பு வெளிப்பட்டு நிற்கின்றது. நீண்ட வரலாற்றை உடைய தமிழர்களின் வாழ்வியலில் போர் முடிவடைந்ததன் பின்னரான கடந்த மூன்று வருடங்களில் வரலாற்று மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
சைவ மக்களின் புனித தலமான கோணேசர் ஆலயம் இன்று சுற்றுலாத்தலம் போன்று மாற்றம் அடைந்து வருகின்றது. ஆலயத்தின் சூழல் கூட இன்று மாற்றம் பெற்றுள்ளது. ஆலயத்தின் பிரதான வீதியின் இரு பக்கங்களிலும் குறிப்பிட்ட தூரத்துக்குத் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் கோயில் சூழலின் இயற்கை அழகில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோணேசர் ஆலயச் சூழலில் மான் கூட்டங்களும், குரங்குகளின் கூட்டமும் தனி அழகு. 2006 ஆம் ஆண்டு சம்பூரில் ஏற்பட்ட போரின்போது, இலங்கை இராணுவம், கோட்டையிலிருந்து சம்பூர் பிரதேசத்தின் மீது பல் குழல் பீரங்கித் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டதனால் பீரங்கித் சத்த அதிர்வு காரணமாக கோணேசர் ஆலய சூழலில் இருந்த பெருமளவு குரங்குகள் காட்டுப் பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டன.
இப்போது கோணேசர் ஆலயச் சூழலில் குரங்குக் கூட்டங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. இதே போன்று தான் கடைகளின் ஆதிக்கம் ஏற்பட்டதன் காரணமாக மான்களுக்குத் தேவையான உணவு கிடைப்பது குறைவாக இருப்பதனால், மான் கூட்டங்கள் ஆலய சூழலில் இருந்து இன்று வெளியேறி வருகின்றன.
அவை திருகோணமலை நகரசபை வளாகத்துக்குள்ளும், கடற்கரைப் பகுதிகளிலும் நடமாடித் திரிகின்றன. இதனால் ஆலயச் சூழலின் இயற்கை அழகு மாற்றமடைந்து வருகின்றது. ஆலய சூழலில் மான்களின் எண்ணிக்கை கூட தற்போது குறைவாகவே காணப்படுகின்றது.
கோணேசர் ஆலயம், திருகோணமலை சைவ மக்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல. உலகில் வாழும் இந்து மக்களின் அடையாளமாக இந்த ஆலயம் விளங்குகின்றது. எனவே ஆலய பரிபாலன சபையினர் மேற்குறிப்பிட்ட சில விடயங்களில் தமது கவனத்தை திருப்ப வேண்டியது காலத்தின் தேவையாகும்.
புண்ணிய தலமாக விளங்கும் இந்த ஆலயத்தைச் சுற்றுலாத் தலமாக மாற்றி வருவதற்கு இடமளிக்கக் கூடாது. இந்த ஆலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அரசுடன் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் முயற்சி எடுக்க வேண்டும்.
கன்னியா வெந்நீர் ஊற்று, கோணேசர் ஆலயத்துடன் தொடர்புபட்டது. கன்னியா நீரூற்றைப் பற்றிப் புராணங்கள் கூறும் வரலாற்றின் படி மகாவிஷ்ணு மூர்த்தியே அவற்றை உற்பத்தியாக்கினார் எனக் கூறப்படுகிறது.
கோண நாயகரிடம்தான் பெற்ற இலிங்கத்தைக் கையிலேந்திக் கொண்டு, இலங்கை மன்னன் இராவணன் செல்லும் போது விஷ்ணு மூர்த்தி ஓர் அந்தண வடிவம் தாங்கி தசக்கிரீவனைச் சந்தித்து அவன் தாயார் உயிர்நீத்த செய்தியைத் தெரிவித்தார்.
இலங்கைக் காவலன் அதைக் கேட்டதும் துக்கத்தில் ஆழ்ந்தான். முனிவர் அவனைத் தேற்றிய பின்னர், தனயன் தாய்க்குச் செய்ய வேண்டிய கன்மாதிக் கிரியைகளைச் செய்யுமாறு நினைவுறுத்தினார். இந்தப் புண்ணிய தலத்தில் கன்மாதிக் கிரியைகளைச் செய்தால் அவர் மோட்ச வீட்டை அடைவது திண்ணம் என்று கூறினார்.
அந்த அந்தணரே அதைச் செய்து முடிக்க வேண்டுமென்று இராவணன் வேண்டிக் கொண்டதற்குச் சம்மதித்த அந்தணர் அவனை அழைத்துக் கொண்டு திருகோணமலைக்கு மேற்கிலுள்ள கன்னியா என்னும் தலத்திற்குச் சென்று அந்த இடத்தில் தமது கையிலிருந்த தண்டினால் ஏழு இடத்தில் ஊன்றினார்.
அந்தண வடிவங்கொண்ட மகாவிஷ்ணு ஊன்றிய ஏழு இடங்களில் நீரூற்றுத் தோன்றின என்று புராணங்கள் கூறுகின்றன. இறந்தவர்களுக்கு அந்த இடத்தில் அந்தியேட்டிக் கிரியைகள் செய்தால், அந்த ஆன்மாக்கள் முத்தியடையுமென நம்பப்படுகின்றது.
இராவணன் தனது தாயாருக்குரிய கன்மாதிக் கிரியைகள் எல்லாவற்றையும் அங்கு முறைப்படி செய்தான் என வரலாறு கூறுகின்றது. தமிழரின் அடையாளமாக விளங்கும் கன்னியா வெந்நீர் ஊற்று, இன்று தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டு அந்தப் பகுதி பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடைய வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய சூழலில் கூட பாதுகாப்பு பிரிவினர் நிலை கொண்டுள்ளனர். இது ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைகின்றது.
குளக்கோட்ட மன்னனுடன் தொடர்புடைய சம்பூர் பிரதேசம், தமிழரின் கலை, கலாசார விடயத்தில் ஆணிவேராகவும் கருதப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட போரின் பின்னர் அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறிய தமிழ் மக்கள் இன்று வரை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
இதனால் தனித்துவமான பாரம்பரியமுடைய கிராமிய கலைகள் கூட அந்த மக்களிடம் இருந்து சிதைவடைந்து வருகின்றன. திருகோணமலை மாவட்டத்திலுள்ள காளி கோயில்களில் மிகவும் பழைமையான ஆலயமாக விளங்குவது சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயமாகும்.
இந்த ஆலயம் கூட வெளியாரால் போரின் போது உடைக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளது. விலை மதிக்க முடியாத பல விக்கிரகங்கள் கூட எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
கடந்த வருடம் வைகாசி மாதத்தில் மட்டும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த ஆலயத்துக்கு மக்கள் சென்று வழிபட கடற்படையினர் அனுமதி வழங்கி இருந்தனர்.
அதன் பின்னர் ஆலயத்துக்கு மக்கள் சென்று வழிபட கடற்படையினரால் அனுமதி வழங்கப்படவில்லை. ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படும் சூழல் காணப்படுகின்றது.
இந்த நிலையில், உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழரின் வரலாற்றுப் பிரதேசமான சம்பூர் இராணுவ மயமாக்கப்பட்டு வருகின்றது. திருகோணமலையில் தமிழரின் பண்டைய அடையாளங்களை பார்க்கும் போது, முத்தூர் என்பது இன்று மூதூர் என்று அழைக்கப்படும் திருகோணமலையிலுள்ள ஓர் இடமாகும்.
தமிழ்க் கலைகள் அறுபத்தி நான்கும் அகத்தியரால் போதிக்கப்பட்டவையாகும். அகத்தியத் தாபனம் பல்கலைகளையும் போதித்து வந்துள்ளது. திருமங்கலாய் தொடங்கி முத்தூர் துறை மகாவலி வரை மகாவலி ஆற்றுக்கு கிழக்கே கங்கை வெளி பரந்து காணப்பட்டது.
இன்று கங்குவேலி என்று பெயர் குறுகிவிட்டது. உலகில் முதலில் நாகரீகம் தோன்றியது இங்கே தான் என முத்தூர் அகத்தியர் என்ற ஆய்வு நூலில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. கங்குவேலியிலுள்ள அகத்தியத் தாபனம் அழிந்த பின்னரும், வழிபாட்டுத் தலமாக சிவலிங்கம் காட்சியளித்தது.
அத்துடன் அகத்தியத் தாபனத்தின் வாயில் படிகள், சந்திரவட்டக்கல் உட்பட கல்வெட்டுக்கள் என்பன போர் முடிவடைந்த பின்னர் சமாதானச் சூழல் நிலவுகிறது எனக் கூறப்படும் காலத்தில் தான் சேதமாக்கப்பட்டிருக்கின்றன.
ஈழ நாட்டில் அகத்தியரைப் பற்றிய குறிப்புக்கள், நூல்கள், வரலாற்றுச் சுவடுகள் அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் தமிழரின் வரலாற்றுக் காலத்துக்கு இவை முற்பட்டவையாகும்.
தமிழ்ப் பேரவைக்கால நூல்களில் முத்தூர் அகத்தியர் என்று தம்மைத் தாமே அறிமுகப்படுத்தியுள்ளமையை நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அகத்தியர் ஈழத்தில் திருகோணமலையில் பல்லாண்டுகள் காலம் வாழ்ந்துள்ளார் என்பதை அவர் பணிகளாலும், நூல்களாலும் அறிய முடிகின்றது.
திருமங்கலாய்ச் சிவன்கோயில், அகத்தியத் தாபனம், திருக்கரசைச் சிவன் கோயில் என்பவற்றை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். இதன் மூலம் திருகோணமலையின் தமிழரின் வரலாறு, வரலாற்றுக் காலங்களுக்கு முற்பட்டது என் பதை உறுதி செய்ய முடிகின்றது.
தமிழரின் அடையாளமாக விளங்கும் கன்னியா வெந்நீர் ஊற்று, இன்று தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டு அந்தப் பகுதி பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றது.
நன்றி:உதயன் ஊடகம்.