திங்கள், 8 அக்டோபர், 2012

கொங்குநாட்டில் புத்துயிர்பெறும் சிலம்புக்கலை
விடுதலைப்போராட்ட மாவீரன் தீரன்சின்னமலை சிலம்பாட்டத்தில் கைதேர்ந்தவர்.வெள்ளையனை எதிர்த்து போரிட்ட தீரன்சின்னமலை! சிலம்பாட்ட வீரர்களை தடிக்காரப்படை என்ற பெயரில் வடிவமைத்து வெள்ளைப்படையின் மீது கொரில்ல முறையில் எதிர்பாராத தாக்குதல்களை நடத்தி நிலைகுலையச்செய்தவர்.அழிவின் விளிம்பில் உள்ள சிலம்புக்கலைக்கு புத்துயிர் கொடுக்கும் அரசுபள்ளி பாராட்டுக்குறியது.

உடுமலை அருகே அரசுப்பள்ளி மாணவர்கள் பாரம்பரிய மிக்க, சிலம்ப கலையினை, பள்ளி நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் ஒத்துழைப்பால், மாணவர்கள் முறையாக பயின்று வருகின்றனர். அழிந்து வரும் கலையாக காணப்பட்ட சிலம்பம், இளைய சமுதாயத்திடம் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருவதால், மீண்டும் புத்துயிர் பெற்று வருவதாக, சிலம்ப பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் தோன்றியது சிலம்ப கலை. தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்டு, போற்றி பாதுகாக்கப்பட்டு வந்த தற்காப்பு கலைகளில், ஒன்றாக இக்கலை இருந்துள்ளது. கடந்த காலங்களில், சிலம்பாட்டம், புலி விளையாட்டு, கரடி விளையாட்டு, சில்தா (கம்பு), பிச்சுவா (இரண்டு கத்தி) சோடு, வாள், குத்து வரிசை, தீபந்தம், சுருள் கத்தி, மகுடு என்ற மான் கொம்பு விளையாட்டு ஆகியவை தமிழகத்தில் பாரம்பரியமிக்க போர் கலையாகவும் இருந்துள்ளது.

இதில், சிலம்ப பயிற்சி பெற்றவர்கள், பயிற்சி பள்ளிகளை துவக்கி அதன் மூலம் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இக்கலையினை கற்றுத் தந்து வருகின்றனர். தேங்காயை தலையில் வைத்து உடைத்தல், தராசு தட்டில் முட்டை வைத்து சுற்றுதல், தராசு தட்டில் இரண்டு டம்ளரில் தண்ணீர் வைத்து சுற்றுதல் போன்ற பல்வேறு பயிற்சிகளும் சிலம்ப ஆசிரியர்களால் அளிக்கப்படுகிறது. திருவிழா மற்றும் பண்டிகை காலங்களிலும், சிலம்ப போட்டிகள் நடைபெறுகிறது; மாவட்ட அளவிலும் சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டு சிலம்ப கலைகளை இளைஞர்களிடம் வளர்க்கப்பட்டு வருகிறது.

உடுமலை அருகே பள்ளபாளையம் ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 225 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவர்கள் பாரம்பரிய மிக்க சிலம்ப கலை கற்க ஆர்வம் காட்டியதால், பள்ளி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகமும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

முதற்கட்டமாக தற்போது, ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரம்தோறும், வெள்ளிக்கிழமைகளில், மதிய நேரத்தில், 3.00 மணிக்கு மேல் மாணவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. முதலில், குச்சிகளை சுற்ற கஷ்டமாக உணர்ந்த மாணவர்கள் தற்போது, லாவகமாக குச்சிகளை சுற்ற பழகிகொண்டுள்ளனர்.

"பெற்றோர்கள் ஒத்துழைப்பு, கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறப்பட்ட பின்னரே, சிலம்ப பயிற்சி வாரத்தில் ஒரு நாள் ஊராட்சி தலைவர் ஒத்துழைப்போடு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்கள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். உடற்பயிற்சி போன்றுள்ளதாலும், தற்காப்பு கலையாக உள்ள இக்கலையினை கற்க மாணவர் மட்டுமின்றி, மாணவியரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்,'' என்றார் இப்பள்ளி தலைமையாசிரியர் மகாலட்சுமி.

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சிலம்பம்
சிலம்ப ஆசான் சக்திவேல் மற்றும் பயிற்சியாளர் நந்தகோபால் கூறியதாவது:
ஆங்கிலேயர்களை விரட்ட வீரபாண்டிய கட்ட பொம்மன், புலித்தேவர், மருதபாண்டிசகோதர்கள் உள்ளிட்ட மன்னர்கள் காலத்தில் சிலம்பம் போர்க்கலையாக பயன்படுத்தப்பட்டதாக சிலம்ப வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலம்பம் வெறும் கலை மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இப்பயிற்சியின் மூலம் உடற்பயிற்சி, உளப்பயிற்சி, அதிர்வினை நிகழ்வு, உடல் தாங்கும் திறன் பயிற்சி, சமயோசிதமாக சிந்தித்தல், நிலை தடுமாறாமல் நிற்கும் பயிற்சி, சிலம்பத்தை கைகளினால், பயன்படுத்துவதால் விரல்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.உயிருக்கும் ஆரோக்கியம் தரும் சிலம்பம் மனித வாழ்க்கைக்கு கற்பக விருட்சமாக உள்ளது. தற்போது சிலம்பாட்டத்தை அரசு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்த்துள்ளனர். இதனால், அழிவின் விளிம்பில் இருந்த சிலம்ப போட்டி தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.

பள்ளபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தற்போது மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. ஊராட்சி தலைவர் ஒத்துழைப்பால், இப்பயிற்சி மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படுகிறது. இதற்கான சம்பளமும் அவர் சொந்த செலவில் வழங்கி வருகிறார். தற்போது, விடுமுறை நாட்களிலும் தினசரி மாணவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

நன்றி:மேற்கண்ட செய்தி தினமலரில் வெளியாகி-தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வளைதளத்திலிருந்து எடுத்தாளப்பட்டது.

கொரிய மொழியில் 450 தமிழ் சொற்கள்

"தமிழ் கலைச் சொல்லாக்கத்தை வளர்ப்பது நம் கையில் தான் உள்ளது. அதை அடுத்த தலைமுறைகளுக்கு நேர்மையாக, பிழையில்லாமல் கொண்டு செல்ல வேண்டும்,'' என, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் சேகர் பேசினார்.

தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ்க் கலைச்சொல்லாக்கம் குறித்த தேசிய கருத்தரங்கம் நேற்று துவங்கியது. விழாவில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் சேகர் பேசியதாவது: காலையில் இருந்து மாலை வரை நாம் செய்யும் செயல்களைக் கூறும் போது, ஆங்கிலமும், தமிழும் கலந்து கூறுகிறோம். இப்படி பேசுவது படித்தவர்களாகிய நாம் தான். பாமர மக்கள் இப்படி பேசுவது கிடையாது. அதனால் தான் சொல் சிதைவு, மொழி சிதைவு ஏற்பட்டுவிட்டது. இதை மாற்றி அமைக்க இக்கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. பேருந்து நிலையம் என்றால் பலருக்குத் தெரிவதில்லை. தமிழகத்தில் இருக்கிறோமா என்ற அச்சம் ஏற்படுகிறது. தமிழில் சொல் பஞ்சம் என்பதே இல்லை. ஆனால், பயன்படுத்துவதில்லை. ஆங்கிலம் பேசினால் அறிவாளி என நினைப்பர் என்று கருதி ஆங்கிலம் பேசுகிறோம். ஆனால், முழுமையாக ஆங்கிலம், தமிழ் பேசுபவர்களை பார்த்ததில்லை.

ஆங்கில மோகம்: நாம் ஆங்கில மோகத்தில் விழுந்து விட்டோம். பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை. அதே நேரம், தமிழ் மொழியை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும்; எழுத வேண்டும். தமிழகத்தில் கரன்ட் என்பது மின்சாரம் ஆவதற்கு, 24 ஆண்டுகள் ஆகியுள்ளது. ரோம் நகரத்தில் சர்ச்சிற்கு வருபவர்களுக்கு, காலணிகளைத் துடைப்பது ஒருவரின் வேலை. அவர் யாரிடமும் ஊதியம் வாங்குவதில்லை. ஆனால், லத்தின் மொழி பேசுபவர்களிடம் மட்டும் ஊதியம் வாங்குவார். இது, அவருக்கு உள்ள மொழிப் பற்றைக் காட்டுகிறது.

தமிழ் பெயர் தவிர்ப்பு: நல்ல தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொள்வது கூட கிடையாது. காரணம், தயக்கம். உணவு விடுதிகளில் சோறு கேட்கும் போது, "ரைஸ்' கொடுங்கள் என்கிறோம். ஆங்கிலேயருக்கு சோறு, அரிசிக்கு "ரைஸ்' என்று ஒரே பெயர் தான். தமிழை நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, கலைச் சொல்லாக்கத்தை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். நாகர்கோவிலில் "இருக்கின்றது' என்ற சொல், மதுரை வரும் போது "இருக்கு' என, மாறுகிறது. அது, விழுப்புரம் வரும்போது "கீது' என்று மாறுகிறது. அதே சென்னைக்கு வரும்போது "தோ' என்று ஒரு எழுத்தாக மாறுகிறது. இது ஆவணமாக மாறிவிடும். இந்த பதிவிற்கு நாம் காரணமாக மாறிவிடக்கூடாது என்பது இந்த கருத்தரங்கின் நோக்கம். கம்பர், இராமாயணத்தில் ராமன் என்று கூறமாட்டார்; இராமன் என்று தான் கூறுகிறார். லட்சுமணனை இலக்குமணன் என்று தான் கூறுகிறார்.

கொரியாவில் 450 சொல்: பாரதிக்கு தமிழ் மேல் உணர்வு இருந்தது. தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழ்ச் சங்கம் வேண்டும் என, கனவு கண்டார். தற்போது, மதுரையில் சங்கமும், தஞ்சையில் பல்கலைக் கழகமும் வந்துவிட்டது. இங்குள்ள மொழியை அங்கு கொண்டு சென்று ஆங்கிலத்தை பலப்படுத்திக் கொண்டனர். உலகில் உள்ள மொழிகளில், 20 சதவீதம் தமிழ் மொழி சொற்கள் உள்ளன. கொரிய மொழியில் 450 தமிழ் சொற்கள் உள்ளன. "தேர் இஸ் சம்திங்' என்று சொன்னால், உடலில் உள்ள எட்டு கலோரிகள் போகின்றன. அதே வார்த்தை, "அங்கு ஏதே உள்ளது' என்று தமிழில் கூறினால், ஒன்றரை "கலோரி' மட்டுமே செலவாகிறது. எனவே, தமிழ் என்பது இதயத்தில் இருந்து வருகிறது.

பிரித்து பேச வேண்டும்: எனவே, படித்தவர்கள் மத்தியில் கலைச் சொல்லாக்கம் வளர வேண்டும் என்பதற்காக இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் இல்லாத தமிழ் வார்த்தையா? பேசும்போது, பிரித்துப் பேசுவதை பிரித்துப் பேச வேண்டும். சேர்த்துப் பேச வேண்டியதை சேர்த்துப் பேச வேண்டும். இல்லாவிட்டால் பொருள் மாறிவிடும். எனவே, அடுத்த தலைமுறையிடம் தமிழ் மொழியை முறையாக, சரியாக, பிழையில்லாமல் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு சேகர் பேசினார்.

கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய பேராசிரியர் குணசேகரன் பேசுகையில், "கலைச் சொல்லாக்கம் என்பது, மற்ற மொழிகளில் உள்ள சொற்களை தமிழில் பயன்படுத்த வேண்டும் என்பது தான். தமிழில் இல்லாத சொற்களே இல்லை. எனவே, பிறமொழி சொற்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த கருத்தரங்கம் மூலம் சிறந்த கலைச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும்' என்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணை பேராசிரியர் செல்லகுமார் வரவேற்று பேசினார். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் நடராஜன் பிள்ளை துவக்கவுரை நிகழ்த்தினார். கருத்தரங்கம், மூன்று நாட்களுக்கு ஆறு அமர்வுகளாக நடத்தப்படுகிறது.

நன்றி:மேற்கண்ட செய்தி தினமலரில் வெளியாகி-தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வளைதளத்திலிருந்து எடுத்தாளப்பட்டது.tiaskk.blogspot.com